நான் 2020 பேசுகிறேன் !
ஏன் என்னை இப்படிப் பார்க்கிறாய்?
வேண்டாப் பொருளாகி விட்டேனா நான்?
உன் உல்லாச அறைக்குள் தெரியாமல் எரிந்த சுடரா நான்?
உன் திருமணச்சட்டையில் மார்பில் செங்கறையா நான்?
நீ வெளியில் செல்கையில் முகஞ்சுழிக்கும் மதிலோரக் குப்பையா நான்?
நீ வீசியெறிந்த குப்பைகளின் மலைமேடு நான்!
உன் இன்பக்கழிவுகளின் பெருந்திரட்சி நான்!
தறிக்கெட்டோடிய காலச்சக்கரத்தின் தடுப்பு நான்!
உனக்கு மனிதத்தை போதிக்கவந்த வைரஸ் நான்!
யாவும் நீயான பிறகு வேண்டாப் பொருளெல்லாம் வைரஸ்தானே!
மனிதர்களின் உலகத்தில் மற்றவையாவும் வேண்டாப் பொருள்தானே!
எண்ணிக்கையில் பார்த்தாலும் ஏகமாய்ப் பார்த்தாலும்
மனிதரிலும் மரங்கள் பெரிது !
மக்களிலும் மாக்கள் பெரிது !
வாடகை தேசத்தில் குடியிருக்கவந்தவன் நீ !
இன்று இடம்தந்த இயற்கையை வேரறுக்கப் பார்க்கிறாய் !
மனிதம் இருந்ததால்தான் உயிர்களின் முதன்மை ஆனாய் !
இன்று உன்னை முடக்கி வைரஸ் தந்து
மனிதத்தை நீ தொலைத்த கதை சொன்னேன் !
தறிகெட்டு வைரஸ்களாய் பரவிக்கொண்டிருந்த உனக்கு
வைரஸ்சால் ஒரு பாடம் சொன்னேன்.!
2020இல் வல்லரசாகக் கனாக்கண்ட உனக்கு
வல்லரசுகளையே தடுமாறச்செய்து
நல்லரசு மட்டும் ஜெயிக்கும் எனச் சொன்னேன்
சந்தோசத்தை வீதிகளில் தேடாதே
வீட்டுக்குள் ஒரு சொர்க்கம் இருக்கெனச் சொன்னேன்.
மிஷின்களாக ஓடிய உனக்கு மீண்டும் மனிதச்சட்டை மாட்டிவைத்தேன்.
இதுதான் என் தவறு.
இனியும் நீ திருந்தாவிட்டால் மீளவும் செய்வேன் பல தவறு.
சென்றுவருகிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...