• Monday, May 17, 2010

    தொடர்கதை.. நம் வாழ்க்கை.



    தனிமையில் நடந்து செல்கிறேன் கூட்டத்தில் ஒருவனாய் காலிவீதியில். தெருவிளக்குகள் என்னைப்பார்த்து பல்லிளிக்க இரவின் நிஷப்த்தத்தை தேடும் கண்களில் பட்டதென்னவோ அடுக்குமாடிக்கட்டடங்களும் ஆர்ப்பரிக்கும் மக்களும். இன்று அக்ஷயத்திருதியை வேறு பொன்  சேர்க்ககூடிவிட்டார் பலர். நடந்தபாதை எங்கும் முட்டியது தமிழ் மூச்சுக்கள்தான். மூச்சோடு மூர்ச்சிரைத்து அடங்கிவிட்டிருந்ததது என்மூச்சு. மகிழ்ச்சிக்கு குறைவில்லை போலும், இன்றும் கூட்டம் கூட்டமாய் வெட்டிப்பேச்சு வாயினில், வெள்ளைப்பூச்சு நெற்றியில்.

    வீதியோரத்தில் கரையொதுங்கிய பேருந்துகள் கடுகதிப்பயனத்துக்காய் தயார்நிலையில், நெடுதூரப்பயணம் இன்றுவரை நெருக்குவாரப்பயணம், உறங்கிய யாழ்தேவிக்காய் விழித்துக்கொண்ட தற்காலிக/நிரந்தர முகவர்கள் இந்த பேரூந்துகள். அவை சுற்றி ஆருடம் பேசும் அசகாயர்கள் சிலரும் ஆரியம் பேசும் வீரியர் பலரும். இவர்களில் ஒருவர் உள்நாட்டு அகதிகள் மற்றவர் உள்நாட்டு உல்லாசப்பயணிகள். ஏறெடுத்துப்பார்க்கிறார் என்னையும் ஏதோ எதிர் நாட்டார் போல. அத்துணையும் மனசுக்கு பழகிப்போன ஒன்று.. இன்று நேற்றல்லவே  இக்கதை..



    என்கால்கள் தொடர்ந்து நிற்க மறுக்கிறது , ஏனோ நடக்கிறேன். மனதிலே ஆயிரம் எண்ணங்கள் அம்புதொடுத்து கிளித்துக்கொண்டிருந்ததால் நடப்பதில் நத்தையும் எனை மிஞ்சுகிறது.

    கொஞ்சம் நடந்தேன் பின்னால் ஒருகுரல் "தம்பீ...." மெல்லத்திரும்ப என்தாய் வயதில்  ஒரு அம்மா வயது நாற்பது இருக்கும், கலைந்த கேசம்,

    மங்களப்பொட்டுக்கு பதில் வருஷம் ஒன்று கண்ட தழும்பு, சட்டைக்கல்லில் பலமுறை அடிவாங்கி அசந்து போகாத சேலை அத்தனையும் பார்த்த கண்கள் கையுக்கு செய்தி அனுப்ப கை மணிப்பர்சை நாடியது. "தம்பி நீ நாதன் அண்ணாண்ட மகனேல்லோ !" மனதுக்குள் தலையாட்டியபடி கண்களால் ஆம் என்றேன். அந்த அம்மா முகத்தில் எதோ ஒரு சந்தோசம் , " என்னை உனக்கு தெரியாதுப்பா! உங்கடவீட்டுக்கு பக்கத்திலான் இருந்தனாங்கள் முந்தி, இடம்பேந்து போனதுல ஒட்டிசுட்டானுக்கு போயிட்டம். மூத்தவங்கள் ரெண்டு பேரையும், அதான் அவங்கள் சின்னல்ல உன்னை தூக்கிக்கொண்டு திரிஞ்சவங்கள், அவங்களை பார்த்திட்டு வெளிக்குடுவம் எண்டு வந்தன். பாக்க வந்து போற காசு ICRC குடுக்குது அதான் நிண்டு நாளைக்கு எடுத்துக்கொண்டு போவமெண்டு.. " என்று வந்தகதை சொல்லி முடித்தா. அண்ணாமார் எங்க இருக்கினம் எண்டு மனசு கேக்க தோணிச்சு .. அவள் சொல்லும் போது அவள் கண்களில் பேசிய நீரும் சேர்ந்து பல கதை சொன்னது..கேட்டு மனதை புண்படுத்த விரும்பவில்லை. "எவ்வளவு சந்தோசமா இருக்கு இப்டி இங்க பார்க்க.. எப்டி வளந்துட்டாய் என்ன.. அப்டியே நாதன் அண்ணாவை பார்த்த மாதிரி இருக்கு." அவங்களுக்கு மட்டுமில்ல கையுக்குள் இறுக்குப்பிடியில் இருந்த அந்த ரெண்டு பாவாடை தாவணிகளுக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. அப்படியே கன்னத்த தடவி "வாறன் புள்ள நேரமாயிடுச்சு.." என்று தேன்வாராப்பேசி நடந்தாள்  . ம்ம்... நானும் தலையசைத்தேன். கொஞ்சம் நடந்து பின் திரும்பிப்பார்க்கையில் அதற்குள்ளே அரை மைல் நடந்துவிட்டார்கள். வாழ்க்கையோடு ஓடியே பழகியவர்கள். இன்னொரு குரல் 'வேகமாக நடவேன்' மனசு சொல்லிக்கொண்டது...



    அப்போதான்  ஞாபகம் வந்தது நாளைக்கு assignment ஒன்று கொடுத்தாகணும் இண்டைக்குத்தான்   அதைப்பற்றி லெக்சரர் சொன்னவர்..எனக்கு விளங்கேல அந்தாள் சிங்களத்துல ஏதோ அமளியா பிச்செறிஞ்சுட்டு போயிடுது.. வளமையபோல அந்த சீனியர் அண்ணாட்டதான் போய் என்னெண்டு கேட்டு பழைய காப்பிகள வாங்கிட்டு வரணும். விறுவிறு எண்டு நடந்து போனன் அவற்ற பிளாட்டுக்கு. கீழ புது செக்யூரிட்டிகார்டு அந்தாளுட்ட "3/2 போகணும்.... வசந்தன் அண்ணா.... வழமையா வாறனான்" எண்டா அந்தாள் சிங்களத்துல என்னவோகேட்டான் எனக்கு ஒன்னும் புரியல..  "3/2 போகணும்.... வசந்தன் அண்ணா....3/2 வசந்தன் அண்ணா...." என்னு திரும்ப திரும்ப சொன்னன். 7500 ரூபா கட்டி படிச்ச இங்க்லிஷயும் யூஸ்பண்ணி  பாத்தன் முடியல. அவன் திட்டுரமாதிரி என்னவோ எல்லாம் சொன்னான். கடைசியா ஒருமாதிரி அவனுக்கு புரிய வச்சு உள்ள நுழைஞ்சாச்சு.. என்ன பாடுபட வேண்டி இருக்கு ஒரு வீட்ட போறதுக்குகூட. இந்த தமிழையும் இங்லிஷயும்  வச்சு இந்த செக்யூரிட்டி கார்டையே சமாளிக்க முடியலையே.. ஆனா அவன் சிங்களத்தமட்டும் வச்சு என்னையே ஒரு பாடு படுத்திட்டான்..

    ஒருமாதிரி மூன்றாம் மாடிக்கு போனா அங்க ஒரே சனம் அதுவும் வசந்தன் அண்ணா வீட்டுக்கு முன்னால. என்ன ஏதெண்டு தெரியல அதில நின்ற ஒரு பெரியவரிடம் கேட்டேன் "பிள்ளைய கடத்திப்போட்டாங்கள் மூன்று கோடி கேக்குராங்கலாம்" என்றார் "யார் வசந்தன் அண்ணாவையோ" எண்டு கேட்டன். "இல்ல தம்பி அவற்ற தம்பிய, யாழ்ப்பாணத்துல படிச்சுட்டு இருந்தவன் அவனதான். நல்ல பெடியன். இப்டிதான் ஒவ்வொருநாளும் நடக்குதாம் அங்க எத்தனையோ சின்ன பிள்ளைகளை சாகடிச்சும் போட்டாங்கள் படுபாவிகள். உதெல்லாம் இப்ப கொஞ்சகாலமாதான் நடக்குது" என்று வயித்தெரிச்சலை கொட்டித்தீர்த்தார். நன் மேலும் உள்ளே செல்ல துணிவில்லாமல் அந்த பெரியவரிடம் 'வாறன் ஐயா' என்றேன் அவரும் ஓம் தம்பி எண்டுட்டு முணுமுணுத்தார் '''உதெல்லாம் இருக்கவேண்டியாக்கள் இருந்திருந்தா நடக்குமே'''.



    நானும் ஒன்றும் சொல்லாமல் கிளம்பினேன். மீண்டும் கொஞ்சம் தூங்கியிருந்த மனக்கேள்விகள் மீள யுத்தத்தை தொடங்கின. கேள்விகள் வட்டிகள் குட்டிகள் போட்டன. எல்லாம் தாங்கிக்கொண்டு நடந்தேன். கடத்தல் என்றதும் ஒன்று சொல்ல வேண்டும். என்  உயிர் நண்பன். கல்லூரி நாட்களை கசப்பின்றி களித்த நாட்டகள் அவனுடன்தான். எல்லோரையும் சிரிக்க வைத்து அழகுபார்ப்பான் ஆனால் அவன் வாழ்க்கையோ பெரும் துயர். வன்னி மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவுசெயப்பட்டு இன்ஜினியரிங் படிக்க பல கனவுகளுடன் வந்தவன் பின் தந்தையையும் ,தமையனையும் போருக்கு பறிகொடுத்து தாயும் தங்கையும் எங்கிருக்கிறார்கள் என்றுதெரியாமல் நொந்தவன் இன்று அவன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. சுதந்திர நாட்டில் அவனை கண்டுபிடித்துக்கொடுப்பார் யாருமில்லை. மனதில் நடந்த யுத்தம்  கண்ணீராய் எல்லை மீறியது. வானமும் என்கூட அழுதது.. இதற்ற்குமேலும் சிந்திக்க மனம் உறுதியற்றுப்போனது. வீடும் கண்ணருகே வந்துவிட விரைந்து சென்று கதவை தாழ்ப்பாளிட்டு இருண்ட அறையில் தூங்கினேன். இன்று  நடப்பதை நினைக்கவே என்நெஞ்சில் உறுதியில்லை ஒருவருடம் முன்பு இந்நாட்களில்  நடந்ததை  நினைத்தால்  நான்  மீண்டும்  இறந்துவிடுவது  உறுதி......







    .

    Post Comment

    4 comments:

    அமரேஷ் said...

    திறம்பட சொன்னாய் அசுவின் தம்பி..நானும் கேள்விப்பட்டன்...

    நீ சேதி சொன்ன விதத்தை மெச்சவா..?
    அன்றேல்
    சொன்ன சேதியை மெச்சவா..?

    இரண்டையும் சேத்து சொன்னா இது ஒரு ”இலக்கியம்”...

    ARV Loshan said...

    உங்கள் தமிழ் எழுத்து நடையை ரசித்தேன்..

    உருக்கியது பதிவு..

    கருணையூரான் said...

    அருமை ....நன்றாக இருக்கின்றது உரைநடை

    Ashwin-WIN said...

    @ amaresh said //நீ சேதி சொன்ன விதத்தை மெச்சவா..?
    அன்றேல்
    சொன்ன சேதியை மெச்சவா..?//
    சொன்ன சேதிகள் ஒவ்வொன்னும் புரியுஞ்சுதென்னா போதுங்கன்னா. ..

    நன்றி லோஷன் அண்ணா & கருனையூறான்.

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner