(ஆஸ்திரேலியக் கம்பன் கழகத்த்தின் பத்தாண்டு நிறைவை வாழ்த்தி .மொழிந்தது.)
உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே !
பத்தாயிரம் கவிதைகளை
முத்தாக அள்ளிவைத்த
சத்தான, தமிழின் சொத்தான
கம்பனுக்குப் பணிசெய்து
பத்தாண்டு அகவை காண்கிறது
ஆஸ்திரேலியக் கம்பன் கழகம்
தித்திக்கத் தமிழ் தந்தான் !
எத்திக்கும் அதை எழச்செய்தான் !
வித்தைகள் காட்டி நின்றான் !
உத்தமக் கவிஞன் அவன் கம்பன்.
கற்பனைப் பந்துகளை இறுக அழுத்தி
முடிந்தமூட்டை அவன் கவிதை !
கற்பவர் கட்டவிழ்க்கையில்
கற்பனைப் பந்துகள் எட்டுத்திக்கும் பறக்கும்!
எதைப் பிடிப்பது? எதைத் தொடர்வது? என
எண்ணி முடிக்கும் முன்
பல காதை தூரம் பறந்திருக்கும்.
ஒன்றைத்தொடர்ந்து பின்னே போனாலே
பிரபந்த இரகசியம் புரியும் !
அணுவுக்குள் ஆகாயம் தெரியும் !
மின்னல் கீற்றுகளிற்கிடையேயும்
மின்மினிப் பூச்சிகள் மிளிரும் !
மலைக்கும் மடுவுக்குமாய் வளர்ந்த மரத்தை
பட்டாம்பூச்சிகள் தங்கிச்செல்லும் !
மண்புழுவின் எச்சத்தை
மதயானைகள் தூக்கமுடியாமல் தூக்கிச்செல்லும் !
சொல்லுக்குள் வாக்கியங்கள் நீண்டு தெரியும் !
எழுத்துக்குள் ஏழு அண்டமும் விரவி நிற்கும் !
ஏகாந்த வார்த்தைகளுக்குள்ளும் அவன் எகத்தாளம் தெரியும் !
தொடரத் தொடர பித்துப்பிடிக்கும் !
செத்துமுடியும் முன் சித்தெறும்பலாவேனும்
கம்பனைப் படிக்கோமா என ஏக்கம் கொள்ளும் !
அவன் ஆக்கிவைத்த கூட்டின் சுவையறியமுன்
கூடு பிரியுமோ என்று உயிர் தேட்டம் கொள்ளும் !
இந்தத் தேட்டம் தீர்க்கவே
கம்பன் தோட்டத்து மலர்கள் அமைக்கிறார்கள்
ஆஸ்திரேலியாவில் கம்பன் விழா !
விழவு சிறக்கவும், விழவுகொள்ளும் கம்பன் தமிழ் சிறக்கவும்,
சாரலில் நனையும் ரசிகர் மனம் சிறக்கவும்
அவர் தலைவர் அன்னவர் பதம் வணங்கி நிற்கிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...